Tamil News
மதரஸா சென்ற சிறுமியின் இரு கைகளை பிடித்து தூக்கி சாலையில் அடித்த கொடூரன்; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
கேரள மாநிலம் காசர்கோடு அருகே மதரஸா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை இளைஞர் ஒருவர் தூக்கி சாலையில் அடித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மஞ்சேஸ்வரம் பகுதியிலுள்ள மதரஸாவிலிருந்து நேற்று காலை 8 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கடை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சிறுமியின் அருகே சென்றார்.
பின்னர் இருகைகளாலும் சிறுமியை வேகமாக தூக்கி ரோட்டில் பலமாக வீசி அடித்தார்.
அதன் பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து போய்விட்டார் அந்த இளைஞர். ரோட்டில் விழுந்த சிறுமி உடனடியாக எழுந்து சிறிது தூரம் சென்றுவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியைக் கிளப்பியது.
இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் மதரஸாவிற்கு வந்திருக்கிறார்கள்.
பின்னர், மதரஸா நிர்வாகிகளிடம் கேட்டதற்கு யார் சிறுமியை தூக்கி வீசியது என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் அபூபக்கர் சித்திக் என்பவர், சிறுமியை தூக்கி வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் மஞ்சேஸ்வரம் போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் அபுபக்கர் மீது போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆனால், அபுபக்கர் எதற்காக சிறுமியை தாக்கினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளச்சேரியில் கடந்த 4-ம் தேதி நடந்த ஒரு சம்பவம்தான்.
அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், அங்கு நின்றிருந்த ஒரு காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
இதனால் ஆத்திரமடைந்த அக்காரின் உரிமையாளரான முகமது ஷிசாத் என்பவர், அச்சிறுவனை காலால் எட்டி உதைத்தார்.
இதனால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சியடைந்தான். இதை சிலர் தட்டிக்கேட்டபோதும், ஷாசாத் அலட்சியமாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முகமது ஷிசாத்தை கைது செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குதற்குள் தற்போது 8 வயது சிறுமி மீதான தாக்குதலும் நடந்திருப்பதால், கேரள மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
