Politics
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால், மநீம வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு.!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
தனித்து போட்டியிட்ட நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.82 சதவீதத்தையும் நகராட்சியில் 0.21 சதவீதமும் பேரூராட்சியில் 0.07 சதவீத வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்றிருந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில் மணி, நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
நடைபெற்ற நகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டு மணி தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு 44 ஓட்டுகள் கிடைத்திருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
