Tamil News
சொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தாய்; என்ன காரணம் தெரியுமா??
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ந்தேதி லாரி உரிமையாளரான சதீஸ் குமார் நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் சடலமாக மீட்டனர்.
திருச்சி மாவட்டம்
மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம், அம்சவள்ளி தம்பதியினர்.
இவருக்கு அமிர்தராஜ்,பாலு என்கின்ற சதீஸ்குமார் என இரு மகன்கள்.
இதில் சதீஷ்குமார் (வயது 32). சொந்தமாக லாரி ஒன்றை வைத்து ஓட்டி வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்கள் முன்பு இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரிப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமாரை அவர்களது நண்பர்கள் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து, அவருடைய கை மற்றும் கால்களை கட்டி அந்த பகுதியில் உள்ள வரட்டு ஏரியில் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விடிய, விடிய தேடி வந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவெள்ளறை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர்கள் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜா (34), சுரேஷ் என்கிற பாண்டி(29), புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) (இவர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி ஆவார்), ஷேக் அப்துல்லா (45) மற்றும் 19வயது இளைஞர் ஒருவர் என்பது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லியையும்(63) போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படையை ஏவியது குறித்து அம்சவல்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.37 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது.
அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு மீண்டும், மீண்டும் பணம் கேட்டு அம்சவல்லியிடம் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் இவரின் அட்டகாசத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாய் அம்சவள்ளி சதீஸ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சதீஸ்குமாரின் நண்பரான மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நலராஜா என்கிற புல்லட் ராஜா மூலம் கொலை செய்ய சொல்லி அதற்கு ஈடாக ரூ. 5 லட்சம் பேரம் பேசி ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் கொலை செய்ய திட்டமிட்ட நண்பர் புல்லட் ராஜா மற்றும் நண்பர்கள் கடந்த 7 ந்தேதி மதியம் சதீஸ்குமாருடன் டாஸ்மாக்கில் மது அருந்தியுள்ளனர். பின்னர் மாலையில் வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.
மதுபோதையின் உச்சத்தில் இருந்த சதீஸ்குமாரை ஏரியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனர்.
இதனையடுத்து கொலை பற்றி தெரியாமல் இருக்க கம்பியால் கை,கால்கள் கட்டப்பட்டு உடலில் கல்லை கட்டி 10 அடி ஆழ தண்ணீரில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதான 6 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த மண்ணச்சநல்லூர் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
