Viral News
உ.பியில் ரவுடிகளை வேட்டையாடும் தமிழக சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்; பேரை கேட்டாலே தெறித்து ஓடும் கிரிமினல்கள்..!
உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்.
இவர் பேரைக் கேட்டாலே லோக்கல் தாதாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் உச்சகட்ட அரசியல்வாதி வரை எழுந்து நிற்பர்.
அந்த அளவிற்கு ரவுடிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டுபவர்.
உளவுப் பிரிவில் பணியாற்றிய முனிராஜை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தற்காலிகமாக மாவட்ட உயரதிகாரியாக நியமித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இரண்டு மாதங்களில் சிறப்பாகப் பணியாற்றி என்கவுன்டர்களை நடத்திய முனிராஜை, அந்த மாவட்டத்திற்கே முழுநேர அதிகாரியாக நியமித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது யோகி அரசு.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் முனிராஜ்.
அந்தக் கிராமத்திலேயே உள்ள அரசுப் பள்ளியில் தன் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார்.
கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை விவசாயப் படிப்பை முடித்தார்.
பின்னர், விவசாயத்தில் முதுகலைப் படிப்பை ஹரியானாவில் முடித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள்குறித்த தனது தேடலைத் தொடங்கி, அதில் பயணிக்கத் தொடங்கினார்.
2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வாகி, தொடர்ந்து வடமாநிலங்களிலேயே பணியாற்றி வந்த முனிராஜ் ஐ.பி.எஸ், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் எஸ்.எஸ்.பி ஆகப் பணியாற்றி வருகிறார்.
யோகி ஆதித்யநாத் கடந்த முறை உ.பி முதல்வராக இருந்தபோது, முனிராஜ், புலந்த்சாகர், பரேலி மற்றும் அலிகார் மாவட்டங்களில் பல்வேறு என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளார்.
உளவுப் பிரிவு தலைமையக எஸ்.பியாகவும் பணியாற்றி வந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வழிப்பறிக் கொள்ளை, சங்கிலிப் பறிப்பு, கொலை என குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வந்தன.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் காசியாபாத் எஸ்.எஸ்-பியாக இருந்த பவன்குமார், யோகி ஆதித்யநாத் அரசால் ஐ.பி.எஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், ஐ.பி.எஸ் அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த முனிராஜை காசியாபாத் மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.எஸ்.பியாக நியமித்து உத்தரவிட்டது உத்தர பிரதேச அரசு.
லக்னோ உளவுப்பிரிவு தலைமையகத்தின் எஸ்.பியாக பொறுப்பு வகித்த முனிராஜுக்கு காசியாபாத் மாவட்ட எஸ்.எஸ்.பியாக தற்காலிக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர களத்தில் இறங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முனிராஜ்.
சில வாரங்களிலேயே அந்த மாவட்டத்தில் அராஜகம் செய்து வந்த மாஃபியாக்களின் அட்டகாசங்களை முனிராஜ் ஐ.பி.எஸ் பெருமளவுக்கு கட்டுப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
காசியாபாத்தில் ரௌடியிசம் செய்து மக்களை அச்சத்தில் வைத்திருந்தது துஜானா கும்பல்.
கேங் லீடரான அனில் துஜானா சிறையில் இருக்கும் நிலையில், அவனது குழுவைச் சேர்ந்த பில்லு துஜானா, ராகேஷ் துஜானா ஆகியோர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடைசியாக ஒரு இரட்டைக் கொலையிலும் ஈடுபட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
துஜானா கும்பலை பிடிக்க பரிசும் அறிவித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களை பிடிக்க தானே தலைமை வகித்து ஒரு தனிப்படையையும் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் முனிராஜ்.
நேற்று முன்தினம் இரவு, காசியாபாத்தின் இருவேறு பகுதிகளில் மறைந்திருந்த இருவரையும் போலீசார் சுற்றிவளைத்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கி்ச் சண்டையில் பில்லு துஜானா, ராகேஷ் துஜானா ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, முனிராஜை உளவுப்பிரிவு பணியிலிருந்து விலக்கி, காசியாபாத்தின் முழுநேர எஸ்.எஸ்-பியாக நியமித்து உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது.
காசியாபாத்தில் ரௌடிகளை அடக்கியதற்காக யோகி வழங்கிய பரிசு இது எனக் கூறப்படுகிறது.
அம்மாவட்ட மக்கள் முனிராஜை ‘சிங்கம்’ என்றே அழைத்து வருகின்றனராம்.
தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உத்தர பிரதேச மாநில ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருவது நமக்கும் பெருமையல்லவா.
