Tamil News
கல்வி கட்டணம் கட்டாத மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த கல்லூரி நிர்வாகம்; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு..!!
நாகை அருகே தனியார் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, சித்ரா தம்பதி.
இவர்களின் மூன்றாவது மகள் சுபாஷினி.
இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள ரூ.50 ஆயிரம் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமான படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சுபாஷினி இன்று காலை வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் இறப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நாகை டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனால் நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் உறவினர்கள் வலியுறுத்தினர்.
பேச்சு வார்த்தையின் முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது. மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச் சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
