Viral News
இறந்த சிறுவனின் உடலை கொண்டு செல்ல ரூ.10 ஆயிரம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்; பணமில்லாததால், பைக்கில் 90 கி.மீ தூரம் கொண்டு சென்ற தந்தை..!
சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்த சிறுவனின் உடலை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிக தொகையை ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டதால், மனமுடைந்த தந்தை அச்சிறுவனின் உடலை கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10).
இச்சிறுவனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி SVRR அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகன் உடலை ஆஸ்பத்திரியிலிருந்து தனது சொந்த ஊரான சித்வேல் கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார்.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளனர்.
அந்த அளவிற்கு அவரிடம் பணம் இல்லை.
இதனால், மனமுடைந்த அச்சிறுவனின் தந்தை நரசிம்மலு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து உறவினர் ஒருவரை பைக் எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.
திருப்பதியில் இருந்து சுமார் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள சித்வேல் கிராமத்திற்கு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு சென்றார்.
இது குறித்த வீடியோ வெளியாகி ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோவை ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில் பதிவிட்டு இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
