Tamil News
அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த இளநீர் விற்கும் தாய்; பாராட்டிய பிரதமர் மோடி; குவியும் வாழ்த்துக்கள்..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த இளநீர் விற்கும் ஏழைப் பெண் தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
அப்பெண்மணியை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி (PM Modi) பாராட்டி பேசியுள்ளார்.
திருப்பூர், மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகையால், கட்டிடம் எழுப்ப நிதி கோரப்பட்டிருந்தது.
இதை அறிந்த சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் என்பவர் இளநீர் விற்று தான் சேமித்து வைத்த தனது சொந்த சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் நன்கொடையாக அளித்துள்ளார்.
இவரது கணவர் ஆறுமுகம் அதே பள்ளியில் பயின்றவர். இவர்களது மகன் மெய்நாதன் மற்றும் மகள் ரம்யா இருவரும் அதே பள்ளியில் பயின்றவர்கள் ஆவர்.
இளநீர் விற்கும் சூழலிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்ததை மகிழ்வுடன் பெற்றுகொண்ட தலைமையாசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தர நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி அவர்களை பாராட்டினார்.
இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தம்பதிகளை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இந்த நிலையில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி, இன்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற பெண்ணை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது.
அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது.
அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார்.
இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் நன்கொடை அளித்தது குறித்து பேசிய தாயம்மாள், ஊருக்கு கோவில் முக்கியம் என்பது போல் பள்ளியும் முக்கியம் நம்மால் முடிந்ததை பள்ளிக்கு செய்யும் போது பள்ளியும் தானே வளர்ச்சி பெறும் என்பதால் தன்னால் முடிந்ததை சிறு தொகையாய் தந்திடாமல் ஒரு நல்ல தொகையாக அளித்ததாக கூறினார்.
பாராட்டிற்கோ விளம்பரத்திற்கோ ஆசைபடாமல் தன் மனதில் தோன்றிய நல்ல விசயத்தை உடனடியாய் செய்த தாயம்மாள் – ஆறுமுகம் தம்பதி அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
