Tamil News
“பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை ஒப்படைக்க வேண்டும், தவறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை” – தண்டோரா மூலம் அறிவிப்பு..!
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற வன்முறையின்போது அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் அவற்றைத் திரும்பத் தரவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பள்ளியில் இருந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பொருட்களை வன்முறையாளர்கள் தூக்கிச் சென்றனர். இரு சக்கர வாகனங்களிலும், தலையிலும் அவர்கள் பொருட்களை அள்ளி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக தேடித்தேடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
நேற்று வரை 329 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் பலர் கைதாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அடுத்ததாக பொருட்களை சூறையாடி சென்றவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த பொருட்களை திரும்பவும் பள்ளிக்கு எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும்.
மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
