Tamil News
மனைவிக்கு தெரியாமல் தமது சொந்த கம்பெனியில் ரூ.4 கோடி திருடிய தொழிலதிபர்..!
கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த நிறுவனத்தின் பெண் கணக்காளர் கலைச்செல்வி என்பவரையும் குற்றபிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி ஜிஷா.
வெளிநாட்டில் வசிக்கும் ஜிஷாவின் பெற்றோர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 2011 ம் ஆண்டு Space Makers Roofing Systems Pvt.ltd என்ற தனியார் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பொதுமேலாளராக ரஞ்சித்குமாரையும், ஜிஷாவை உதவி பொது மேலளாராக நியமித்தனர்.
இந்த நிறுவனத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
ரஞ்சித்குமார் நிறுவனத்திற்கு முறையாக வராமல் ஊதாரிதனமாக சுற்றி திரிந்துள்ளார்.
நிறுவனத்தின் பணிகளை ஜிஷா பார்த்துவந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் 2013 ம் ஆண்டு கணக்காளராக பணிக்கு சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு நிறுவனத்தின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சித்குமார் திருடியுள்ளார்.
வருமானவரி மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றை செலுத்தாமல் அந்த தொகையினை தனது கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, இவற்றை செலுத்தியாக போலி பில்கள், ஆவணங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து நிறுவனத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரித்துறையில் இருந்து Space Makers Roofing Systems Pvt.ltd நிறுவனத்திற்கு நோட்டீஸ் வந்துள்ளது.
இது குறித்து ஜிஷா அந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரித்த போது வருமான வரி, ஜி.எஸ்.டி போன்றவை செலுத்தப்பட வில்லை என்பதும், போலியான பில்களை வைத்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து தனது கணவர் ரஞ்சித்குமாரிடம் கேட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
நீண்ட நாட்களாக ரஞ்சித்குமார் திரும்பி வராத நிலையில் அவரது மனைவியும், நிறுவனத்தின் உதவி பொது மேலாளருமான ஜிஷா கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார்.
ரஞ்சித்குமார் மீதும், கலைச்செல்வி மீதும் ஜிஷா புகார் அளித்த நிலையில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் இது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போது சுமார் 4 கோடிக்கும் அதிகமாக நிறுவனத்தின் பணத்தை இருவரும் சேர்ந்து திருடி இருப்பதும் அதில் தனியாக ஒரு வீடு, இடங்கள் போன்றவை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
மேலும் கலைச்செல்வியும் தனியாக ஒரு வீடு கட்டி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரஞ்சித்குமார் மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரையும் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரஞ்சித் பெயரில் உள்ள வீடு, நிலம் ஆகிய சொத்துகளை வழக்கில் சேர்த்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
