Tamil News
“நான் தான் RI; கொடுக்க வேண்டியதை குடுத்திட்டு போங்க” – மணல் லாரியை நிறுத்தி மாமூல் கேட்ட RI-யின் கணவர்; அதிரடியாக பிடித்த போலீசார்..!
கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி அருகே மணல் லாரியை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டிய வருவாய் ஆய்வாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் எம்.சாண்ட் மணல் புளியம்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அப்போது முல்லைநகர் கிராமத்தில் டிப்பர் லாரியை நிறுத்திய போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபாவின் கணவர் கோவிந்தராஜ், தான் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் என கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மணல் லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் வருவாய் ஆய்வாளரின் கணவர் என தெரியவந்தது.
மேலும், தனது மனைவிக்கு அலுவலகத்தில் வேலை இருக்கின்ற காரணத்தால் தன்னை வாகன சோதனையில் ஈடுபட கூறியதாகவும் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கோவிந்தராஜின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கோவிந்தராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபாவிடம் கேட்டபோது, தான் கூட்டத்தில் இருந்ததாகவும், அப்போது வடமலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியை உரிய அனுமதியின்றி செல்லும் வாகனத்தை கண்காணிக்க சொன்னேன்.
அப்போது அந்த வழியாக வந்த எனது கணவர் லாரியை நிறுத்தி அதற்குள் கேட்டுவிட்டார்.
மேலும் தங்களது வண்டி பழுது ஏற்பட்டுள்ளதால், தனது கணவரின் நண்பர் ஒருவரின் வாகனத்தை வாங்கி வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தனது கணவர் எதற்காக லாரியை நிறுத்தினார் என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
