Viral News
மலை உச்சியில் ஏறி நின்று தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை, பேசிப் பேசியே காப்பாற்றிய போலீஸ் எஸ்.ஐ; குவியும் பாராட்டுக்கள்…!
மலை உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய இளம்பெண்ணுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை உயிருடன் மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கியில், அடிமாலி காவல்நிலையத்துக்கு உள்பட்ட குத்திராலம் குடி அருகே உள்ள மலைப் பகுதியின் உச்சியில், பழங்குடியின பெண் ஒருவர், காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் மலை உச்சியில் நின்றிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
அவரது உறவினர்கள் நெருங்கினாலே குதித்துவிடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.
இதனால் அப்பெண்ணை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சநுதோஷ் தான் அந்த பெண்ணை காப்பாற்றுகிறேன் என சவாலுடன் முயற்சி மேற்கொண்டார்.
அந்த பெண்ணிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
முதலில் அவர் சொல்வது எதையும் அந்தப்பெண் காதில் வாங்கவில்லை.
தற்கொலை செய்யும் மன உறுதியோடு இருந்தார். ஆனால், மீண்டும் காவலர் அந்த பெண்ணின் எண்ண ஓட்டத்திற்கு தகுந்தவாறு பேசினார்.
பிறகு அவரது பேச்சுக்கு பதில் கொடுக்கத் தொடங்கினார்.
அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர், உனது பிரச்சினைக்கு தான் தீர்வு தேடித் தருவதாக உறுதி அளித்தார்.
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனவே, உனது பிரச்னையை நான் சுமூகமாக முடித்துத் தருகிறேன் என்று தற்கொலை எண்ணத்தைக் கைவிடும் வகையில் ஒரு மணி நேரம் பேசினார்.
இதைக் கேட்ட அப்பெண், மனம் மாறி, கீழேஇறங்கி வந்தார்.
இதுபோன்று மீண்டும் தற்கொலை எண்ணம் வரக் கூடாது என்றும், தன்னை நிராகரித்தவர்களுக்கு முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் உறுதி பெற்றுக் கொண்டு, மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வழிகாட்டுவதாகவும் உறுதி அளித்தார்.
எஸ்.ஐ சந்தோஷின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
