Viral News
கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் சிக்கிய குழந்தை; தன் உயிரை துச்சமாக நினைத்து காப்பாற்றிய காவலர்; குவியும் பாராட்டுக்கள்..!
ராஜஸ்தான், கராவ்லி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்துள்ளனர்.
அப்போது கொழுந்துவிட்டு எரிந்த ஒரு வீட்டிற்குள் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டிருந்துள்ளது.
இதனை அறிந்த போலிஸ்காரர் நேத்ரேஷ் துணிச்சலுடன் அந்த வீட்டிற்குள் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளார்.
அதேபோல், தீயில் சிக்கிய மேலும் நான்கு பேரையும் அவர் மீட்டுள்ளார்.
இந்நிலையில் நேத்ரேஷ் குழந்தையை தீயில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் போலிஸார் நேத்ரேஷின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் ராஜஸ்தான் முதலமைச்சர் நேத்ரேஷின் துணிச்சல் செயலை பாராட்டி அவருக்கு தலைமைக் காவலருக்கான பதவி உயர்வையும் வழங்கி கவுரவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய நேத்ரேஷ், “நான் இரண்டு கடைகளுக்கு நடுவில் எரிந்து கொண்டிருந்த வீட்டைப் பார்த்தேன்.
உள்ளே மூன்று பெண்கள் இருந்தனர். இதில் ஒருவரின் கையில் குழந்தை இருந்தது.
உடனே வீட்டிற்குள் சென்று குழந்தை மீது சால்வை போர்த்தி என்னிடம் கொடுக்கச் சொன்னேன்.
அவர்களும் குழந்தையை கொடுத்தனர். பிறகு என்னை பின்தொடருமாறு அவர்களிடம் கூறி வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
அந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது. நான் என் கடமையைத்தான் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
