Sports News
செஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் இரண்டாவது தடவையாக தோற்கடித்த தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா; குவியும் பாராட்டுக்கள்..!
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இளம் வீரர் பிரக்ஞானந்தா (Praggnanandhaa) இரண்டாவது முறையாக தோற்கடித்து, செஸ் உலகில் பிரமிப்பான சாதனையை படைத்துள்ளார்.
சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம்.
இதனால் தான் என்னவோ அவர் தனது பயிற்சியை சிறுவயது முதலே தொடங்கி இருக்கிறார்.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார்.
அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் 5வது நபராக பதிவு செய்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவருக்கு 10 வயது (10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில்) இருந்தபோது 2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார்.
அவருக்கு 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில்) இருந்த போது, அவர் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார்.
இந்நிலையில், செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் அதிவேக செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 16 வீரர்கள் கலந்துகொண்டு செஸ் ஆடி வருகின்றனர்.
இதில் 5வது சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40வது சுற்றுக்கு பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டில் 2வது முறையாக கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
