Sports News
செஸ் ஆட்டத்தில் உலக சாம்பியனை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா (Praggnanandhaa); வாழ்த்திய பிரதமர் மோடி..!!
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இளம் வீரர் பிரக்ஞானந்தா (Praggnanandhaa) தோற்கடித்து, செஸ் உலகில் பிரமிப்பான சாதனையை படைத்துள்ளார்.
சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம்.
இதனால் தான் என்னவோ அவர் தனது பயிற்சியை சிறுவயது முதலே தொடங்கி இருக்கிறார்.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார்.
அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் 5வது நபராக பதிவு செய்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவருக்கு 10 வயது (10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில்) இருந்தபோது 2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார்.
அவருக்கு 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில்) இருந்த போது, அவர் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார்.
ஆன்லைன் வழியாக நடைபெறும் ‘Airthing Masters’ எனும் ரேபிட் வடிவிலான தொடரின் எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தாவும் கார்ல்சனும் மோதினார்கள்.
ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆடப்படும் சதுரங்க ஆட்டமாகும். உலகெங்கிலிருந்தும் 16 பேர் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தனர்.
ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் நாளில் மட்டும் பிரக்ஞானந்தா 4 வீரர்களுடன் மோதியிருந்தார்.
இந்த 4 போட்டிகளில் மூன்றில் தோற்று ஒன்றில் மட்டுமே வென்றிருந்தார். முதல் நாளை விட இரண்டாம் நாளில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக சவால்கள் காத்திருந்தன.
சில முன்னணி வீரர்களை இரண்டாம் நாளில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதில், முக்கியமானவர்கள் கார்ல்சனும் லெவான் அரோனியனும். கார்ல்சன் உலகத் தரவரிசையில் நம்பர் 1 வீரர் என்றால், லெவான் நம்பர் 4 வீரர்.
பிரக்ஞானந்தாவோ 193-வது இடத்தில் இருப்பவர். கோலியாத்தை தாவீது தோற்கடித்த அதே கதைதான். ஜாம்பவான்களான கார்ல்சன், அரோனியன் இருவரையும் ஒரே நாளில் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.
குறிப்பாக, உலக சாம்பியனான கார்ல்சனை 39 நகர்வுகளில் ஆட்டத்திலிருந்து பின்வாங்க வைத்து அசத்தியிருந்தார்.
விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.
மேலும், கார்ல்சனைத் தோற்கடித்த வீரர்களில் மிகவும் இளமையானவர் பிரக்ஞானந்தாதான்.
இந்நிலையில், பிரக்ஞானந்தாவை பாராட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது.
திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சதுரங்க ஆட்டத்தில் இப்படி கட்டம் கட்டி ஆடிவந்த பிரக்ஞானந்தாவின் ‘குரு’ வேறும் யாரும் இல்லை. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தான்.
பிரக்ஞானந்தா இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு விஸ்வநாதன் ஆனந்த், அந்த இளம் வீரருக்கு தனது வாழ்த்துக்களை ட்வீட் மூலம் தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு, பிரக்ஞானந்தா தனது குருவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
