Sports News
நார்வே ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா; குவியும் பாராட்டுக்கள்..!!
நார்வேயில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம்.
இதனால் தான் என்னவோ அவர் தனது பயிற்சியை சிறுவயது முதலே தொடங்கி இருக்கிறார்.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார்.
அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் 5வது நபராக பதிவு செய்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவருக்கு 10 வயது (10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில்) இருந்தபோது 2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார்.
அவருக்கு 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில்) இருந்த போது, அவர் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார்
சமீபத்தில் உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்தார்.
இதன் மூலம் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.
மேலும், கார்ல்சனைத் தோற்கடித்த வீரர்களில் மிகவும் இளமையானவர் பிரக்ஞானந்தாதான்.
இந்நிலையில் நார்வே ஓபன் செஸ் போட்டியில் வென்று தன்னை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
9 சுற்றுகள் ஆடிய பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளராக வலம்வந்தார்.
9 சுற்றுக்களிலும் பிரக்ஞானந்தாவை எந்த வீரராலும் தோற்கடிக்க முடியாத வெற்றியாளராகவே இருந்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த கடைசிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் வி.பிரணீத்தை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
சாதனை வீரர் பிரக்ஞானந்தாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
