Tamil News
இறந்து போன பெற்றோருக்கு கோவில் கட்டி சிலை அமைத்து வழிபடும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி..!
மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மறைந்த பெற்றோரின் நினைவாக உருவச்சிலை அமைத்து வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
மதுரை சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபம் மேட்டு புஞ்சை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 56).
இவர் மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர்.
தற்போது விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறார்.
தனது வீட்டில் இறந்து போன தனது தாய் தந்தைக்கு கோவில் அமைத்து சிலை வைத்து வழிபட்டு வருகிறார்.
இது தொடர்பாக ரமேஷ்பாபு கூறியதாவது:
எனது தந்தை பொன்னாண்டி, தாய் மீனாம்பாள். எங்கள் வீட்டில் 5 பெண்கள் உள்பட 7 பேர். இதில் நான் 4-வது பிள்ளை.
எனது மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி உள்ளனர்.
மதுரை மாநகர காவல் துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டேன்.
உடல்நிலை ஒத்துழைக்காததால் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறேன்.
எனக்கு சிறு வயது முதலே தாய் தந்தை மீது அளப்பரிய மதிப்பு மரியாதை உண்டு. தாய் தந்தை என்போர் வாழும் தெய்வங்கள்.
நாம் அவர்களை மதிப்பு மரியாதையுடன் நடத்த வேண்டும், குடும்பத்தை அரவணைத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
இன்றைய தலைமுறை சினிமா நடிகர்களுக்கு பின்னால் செல்கிறது, எனவே நாம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று தந்தை அடிக்கடி குறிப்பிடுவார்.
எனது தாய் மீனாம்பாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
எனது தந்தை பொன்னாண்டி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
எனவே நாங்கள் தாய் தந்தையின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் அனைவரையும் வீட்டுக்கு வரவழைப்போம். குடும்பத்துடன் சாமி கும்பிட்ட பிறகு அன்னதானம் வழங்குவோம்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும், முன்னோர் மீதும் மதிப்பு-மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது.
எனவே எங்கள் குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று விரும்பினேன்.
அதன்படி என் தந்தையின் பிறந்த நாளான கடந்த 10-ம் தேதி தந்தை பொன்னாண்டி-தாய் மீனாம்பாள் சிலையை தத்ரூபமாக வடித்து வீட்டில் கோவில் அமைத்தேன் என கூறினார்.
