Tamil News
எங்கே செல்கிறது தமிழ்நாடு! பேருந்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட அரசு பள்ளி மாணவிகள்; அதிர்ச்சியில் பெற்றோர்..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களை விட பள்ளி மாணவர்கள் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன்விளைந்த களத்துாரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது.
இந்த பள்ளியில் திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் சுற்றுவட்டார மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் சிலர் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் அரசு மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மாணவர்கள் தயாராக வைத்திருந்த பீர்’ பாட்டிலை எடுத்ததும், மாணவியர் அதனை வாங்கி குடித்து கும்மாளம் அடித்தனர்.
இதையடுத்து “குடித்தால் வாடை வருமோ” எனக் கேட்டுவிட்டு ஒவ்வொருவராக குடித்தனர்.
அதன்பின் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பீர் குடித்து பேருந்தில் கும்மாளம் போட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சிகள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சமூகத்தில் உள்ள இளைய தலைமுறை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதுபோல் உள்ளதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணையும் நடந்து வருகிறது.
