Tamil News
அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த மருத்துவ கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் டிரைவரால் நேர்ந்த கொடுமை..!
தமிழக அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த மருத்துவ கல்லூரி மாணவியை நள்ளிரவில் டிரைவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார்.
தொடர் விடுமுறை காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவி, தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன்படி, நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்தில் ஏறி வேலூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மாணவி இரவில் உறங்கும் நேரம் பார்த்து அதே பேருந்தில் ஸ்டெப்னி ஓட்டுநராக பணியாற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் பகுதி மேட்டு தெருவை சேர்ந்த நீலமேகம் (46) என்பவர் மாணவியின் அருகில் அமர்ந்து சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வேலூர் வந்தடைந்ததும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசுப் பேருந்து ஓட்டுனர் நீலமேகத்தை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த பேருந்தில் நடத்துனர் இல்லை. மேலும், நீண்ட தூர பயணம் என்பதால், 2 ஓட்டுனர்கள் இருப்பார்கள். இரண்டாவது ஓட்டுநரை ஸ்டெப்னி ஓட்டுநர் என்று அழைப்பது வழக்கம்.
பலரும் பயணிக்கும் பேருந்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்பயா வழக்கிற்கு பிறகு சட்டங்கள் கடுமையானாலும், அது பலருக்கும் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது அனைவருக்கும் கவலையளிக்கிறது.
