Tamil News
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்..?? பள்ளி ஆசிரியையை பேனா கத்தியால் குத்திய மாணவன்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி ஆசிரியர்- மாணவன் இடையே திருமணம் நடப்பது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பள்ளி கல்விதுறை சார்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
மேலும் மாணவர்களின் மீது தவறான எண்ணங்களை புகுத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது.
சமீபத்தில் அரசு பேருந்தில் பயணித்த மாணவிகள் பீர் குடித்து கும்மாளம் போட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.
அதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் மஞ்சினி அரசு பள்ளியில் தலைமுடியை ஒழுங்காக திருத்தி வா என கூறிய ஆசிரியரை மாணவன் ஒருவன் பீர் பாட்டிலால் தாக்க முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் பள்ளி மாணவன் பள்ளி ஆசிரியையை பேனா கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரேகா (42).
இவர் காட்டுக்கூடலூர் எடப்பாளையம் அருகே, உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
ஆசிரியை ரேகாவின் கணவர் சரவணன் அதே பகுதியில் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
ரேகா வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு மதியம் உணவருந்த வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர் உணவு அருந்தி முடித்து விட்டு வெளியே வந்த போது பள்ளி சீருடையில் இருந்த மாணவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் அவரை தலையில் வெட்டியுள்ளார்.
அதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆசிரியர் ரேகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கத்தியால் வெட்டிய மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆசிரியர் ரேகா கூறுகையில்,
பள்ளி சீருடை அணிந்திருந்த அவருக்கு 18 முதல் 20 வயது இருக்கும். ஆனால் எங்கள் பள்ளி மாணவன் போல் தெரியவில்லை என தெரிவித்தார்.
பள்ளி மாணவ மாணவிகளின் தற்போதைய ஒழுக்க கேடு கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
