Tamil News
ஹோட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட +2 மாணவன் உயிரிழப்பு..!
ஆரணியில் தனியார் ஹோட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மோகனன் தெருவை சேர்ந்த ஆப்பிள் ஸ்கூல் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ்.
இவருக்கு திருமுருகன், கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
சிக்கன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவன் திருமுருகனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவனை சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
திருமுருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இதனால், உடனடியாக திருமுருகனை வேலூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், மாணவன் திருமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர் மாணவனின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவனின் உயிரிழப்புக்கு கடையில் விற்கப்பட்ட தரமற்ற சிக்கனே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அந்த கடையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
