Tamil News
மாறுதல் ஆகிச் செல்லும் டீச்சர்களை பிரிய மனமின்றி கட்டிப்பிடித்து அழுத மாணவிகள்; நெகிழ்ச்சி சம்பவம்..!
வேலூர் கே.வி.குப்பம் அரசு பள்ளியில் பணியிட மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியைகளை மாணவிகள் கட்டிப் பிடித்து கதறி அழுத சம்பவம் பலரையும் நெகிழ வைத்து உள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு புனிதா, கார்த்திகேயன், ஜெயந்தி, தனலஷ்மி, சுகந்தி ஆகிய 5 ஆசிரியர்கள் வகுப்பெடுத்து வந்து உள்ளனர்.
இவர்களில் புனிதா மற்றும் கார்த்திகேயன் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாகவும் மற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
5 ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டால் மாணவிகள் மிகவும் விரும்பி பள்ளிக்கு வருவதுடன் ஆர்வமாக வகுப்புகளையும் கவனித்து வந்து உள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த 15.03.2022 அன்று நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட கேவி குப்பம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 5 ஆசிரியைகளுக்கு பணி இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பணி இட மாறுதல் காரணமாக இந்தப் பள்ளியில் இருந்து இந்த 5 ஆசிரியைகள் விலகி வேறு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வரும்போது மாணவிகள் வெளியே செல்லாதபடி சுற்றி வளைத்து, கட்டிப்பிடித்து அழுதனர்.
வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்த பள்ளியிலேயே இருக்குமாறும் மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
அவர்களை சமாதானப்படுத்திய ஆசிரியர்கள் மாணவிகளை நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அழுதுகொண்டே அங்கிருந்து விடைபெற்றனர்.
இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
