Tamil News
பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து தமிழர் பாரம்பரியம் மாறாமல் திருமணம் செய்த தமிழ் பெண்; குவியும் வாழ்த்துக்கள்..!
வாழப்பாடியைச் சோ்ந்த பெண் பொறியாளரை காதலித்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த இளைஞா், பெற்றோா் சம்மதத்துடன் தமிழா் முறைப்படி திருமணம் செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.
இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி சுகந்தி. இவர்களின் மூத்த மகள் கிருத்திகா (வயது 29).
பொறியாளரான கிருத்திகா, சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வணிக மேம்பாட்டுத் துறை தலைவராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவரோடு பணிபுரிந்து வரும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சோ்ந்த பென்னடி – அட்மா ஊஜெடி தம்பதியரின் மகனான பொறியாளா் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருடன் காதல் மலா்ந்தது.
இதுகுறித்து கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார்.
அசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்றனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்றது இந்த திருமணம்.
இந்த திருமண விழாவில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மணமகன் அசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
இந்த திருமண விழாவில், வாழப்பாடியை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினா் தமிழா் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்றனா்.
நமது உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பாா், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை பிரான்ஸ் நாட்டினா் விரும்பி உண்டு மகிழ்ந்தனா்.
தமிழா்களின் உணா்ச்சிபூா்வமான இந்தத் திருமணம் எங்களை நெகிழச் செய்தது.
விருந்து உபசரிப்பும் உணவுகளும் மிகவும் சுவையாக இருந்ததாக அசானே ஒச்சோயிட் உறவினா்கள் தெரிவித்தனா்.
