Tamil News
“அக்னி வீரர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை வழங்க தயார்” – டாடா குழுமம் அறிவிப்பு..!
அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் திறமையான, பயிற்சி பெற்ற, தகுதியான அக்னி வீரர்களுக்கு டாடா நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
17.5 வயதிலிருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ராணுவத்தில் நியமிக்கப்படுவார்ள்.
பணிக்காலம் முடிந்து செல்வோரில் 25 சதவீதம் நிரந்தப்பணிக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்தத் திட்டத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து வயது வரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்னிவீரர்கள் என்று பெயர்.
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் கடந்த வாரம் போராட்டம், வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அக்னி பாத் ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
‘அக்னி பாத்’ திட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட 260 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்று பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் அக்னி பாத்த திட்டத்தில் பணியாற்றி முடித்துவரும் இளைஞர்களுக்கு பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.
அந்த வகையில் டாடா குழுமமும் அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள டாடா குழும தலைவர் சந்திரசேகரன் “இந்த திட்டம் ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தேசத்தை பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மட்டுமல்லாமல், மிகவும் ஒழுக்கமான பயிற்சி பெற்ற வீரர்களை தொழில்துறைகள் அடையாளம் காணவும் உதவும்.
அக்னி வீரர்களின் செயல்திறனை அங்கீகரிப்பதோடு அவர்களுக்கு தொழில்துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்க டாடா குழுமம் தயாராக உள்ளது” என கூறியுள்ளார்.
