Tamil News
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு; பெண் வனக் காவலரை கழுத்தை நெரித்து கொலை செய்த போலீஸ்காரர்..!!
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறில் பெண் வனக் காவலரை கழுத்தை நெரித்து கொலை செய்த போலீஸ்காரர் திருமுருகன் 26, மதுரை கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சரணடைந்தார்.
மதுரை அனுப்பானடி ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் திருமுருகன். மதுரை பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மனோசித்ரா 24. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
தேனி மாவட்டம், போடி தென்றல் நகரில் வசிப்பவர் சரண்யா. தேனியில் வனக்காவலராக பணி புரிந்து வருகிறார்.
இவரது கணவர் பொன்பாண்டி இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால், தனது இரு குழந்தைகளையும் மதுரையில் பெற்றோரிடம் விட்டு விட்டு போடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சரண்யா கணவர் இறந்த பின் வனத்துறை பணிக்காக மதுரையில் பயிற்சி மையத்தில் படித்தார். அங்கு போலீஸ் வேலைக்காக திருமுருகனும் படித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருந்தது.
பின்னர், திருமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்ற சரண்யா வனக்காவலராகவும், திருமுருகன் போலீசில் வேலைக்கும் சேர்ந்தனர்.
இருப்பினும், திருமுருகன் போடியில் இருக்கும் சரண்யாவின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து தங்கிச் செல்வார் எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த திருமுருகன் மனைவி மனோசித்ரா, தனது கணவரை ஓராண்டாக பிரிந்து வாழ்கிறார்.
தாலி கட்டாத நிலையில் திருமுருகன் அடிக்கடி வந்து சென்றதால் அக்கம்பக்கத்தினர் யார் என்று கேட்க சரண்யா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமுருகன் சரண்யா வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்தியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த திருமுருகன், சரண்யாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இந்நிலையில், சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்திருக்கிறார் திருமுருகன்.
காவல்துறை அதிகாரி ஒருவர் வன காவல்துறை அதிகாரியான பெண்ணை கொலை செய்திருப்பது அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
