Tamil News
நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்..!
நள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு வந்த டிரைவரை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் அபராதம் கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இருந்த போதிலும் சில போலீசார் பொதுமக்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 12 மணிக்கு அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவரை வழிமறித்தனர் போக்குவரத்து போலீசார்.
உதவி ஆய்வாளர் பாலமுரளி ஒருவழிப்பாதை என்பதால் அபராதம் ரூ.1500 கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்டோவில் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை இருப்பதாக கூறியும் அவர்களை விடாத அந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
மேலும் தன்னுடன் இருந்த சக போலீசாரையும் வீடியோ எடுக்க சொன்ன சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
