Tamil News
மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி, திருமணத்திற்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்…!
கிருஷ்ணகிரி அருகே திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வேன் கவிழ்ந்து மணப்பெண்ணின் சகோதரி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாலம்பட்டியை சேர்ந்தவர் ராமு (வயது 25).
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உஷா (20) என்ற பெண்ணுக்கும் இரு தினங்கள் முன்பு தண்ணீர்பந்தலில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக ஊத்தங்கரை பனந்தோப்பை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான வேனை உறவினர்கள் வாடகைக்கு பேசி இருந்தனர்.
மணமக்கள், உறவினர்கள் தயாராவதற்கு தாமதம் ஆனதால் டிரைவர் வேனை ஷெட்டில் நிறுத்தி விட்டு சென்றதாக தெரிகிறது
இந்த நிலையில் மணமக்களின் உறவினர்கள் தயாரானதும் டிரைவர் இல்லாததால் வேன் உரிமையாளருக்கு போன் செய்து தாங்களே வேனை ஓட்டி செல்வதாக கூறினார்களாம்.
இதையடுத்து வேனை உறவினர் சரவணன் என்பவர் ஓட்டினார். அதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த வேனை முந்தி செல்ல முயன்றுள்ளது.
இதனால் அந்த வேன் டிரைவரும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் மணப்பெண்ணின் தங்கை சாந்தி என்ற பெண் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மணப்பெண்ணின் கண் எதிரே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நடக்கவிருந்த திருமணமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்வுக்காக உறவினர்கள் வேனில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
