Tamil News
லஞ்ச பணத்தில் வீடு, 10 ஏக்கர் நிலம் உள்ளிட்ட கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த விஏஓ; அதிர்ந்து போன போலீசார்..!
கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச பணத்தில் கடலூரில் வீடு, 10 ஏக்கர் நிலம் வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள தோப்பிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38). விவசாயி.
இவர் அந்த கிராமத்தில் விவசாய வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு பார்த்தசாரதி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பணத்தை கொடுக்க விரும்பாத அவர் இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைபடி, அன்பழகன் ரூ.10 ஆயிரத்தை பார்த்தசாரதியிடம் கொடுத்த போது, அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விஏஓ பார்த்தசாரதியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் பெற்ற லஞ்ச பணத்தில் இந்த கிராம நிர்வாக அலுவலர் வீடு, 10 ஏக்கர் நிலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்ககளை குவித்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது.
லஞ்ச விவகாரத்தில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
