Tamil News
“ரூ.1000 கொடுங்க, உங்க கணவரோட டெத் சர்ட்டிபிகேட் தரேன்” – நிபந்தனை விதித்த விஏஓ; அதிர்ந்த விதவை பெண்…!
திருச்சி அருகே கணவரின் இறப்புச் சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணிடம் கையூட்டு கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ராமர்( 50).
இவர் கடந்த இருபது நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவால் இறந்தார்.
அவரது மனைவி அமிர்தம் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் அதற்கான இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலரான சுரேஷ் என்பவரை அணுகியுள்ளார்.
இறப்புச் சான்றிதழ் வழங்க தனக்கு ரூபாய் ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் செய்வதறியாது திகைத்த அமிர்தம் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டை அமிர்தத்திடம் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலரிடம் தரச் சொல்லியுள்ளனர்.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த சுரேஷிடம் அமிர்தம் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
விதவை பெண்ணிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
