Tamil News
கூலித்தொழிலாளியை ஈவிரக்கமின்றி கட்டிப்போட்டு அடித்து உதைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!
பல்லாவரத்தில் கூலித் தொழிலாளி ஒருவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் கட்டிப்போட்டு அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அணிஷ்.
இவர் சென்னை மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் சொந்தமாக ஐஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
அந்தக் கடையில் பாலாஜி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
அனிஷ், பாலாஜிக்கு மாதாமாதம் சரியாக ஊதியம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனிசின் 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பாலாஜியும் மூன்று நாள் வேலைக்கு வரவில்லை, இதனால் தனது உடமைகளை பாலாஜிதான் திருடியிருக்கக் கூடும் என சந்தேகித்த அனீஸ் தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து பாலாஜியை தேடினார்.
பாலாஜி பம்மல் பகுதியில் இருப்பதாக அந்த கும்பல் கண்டு பிடித்தது.
காணாமல் போன தனது செல்போன் மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பாலாஜியை அந்த கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது.
செல்போன் மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என பாலாஜி கூறியும் அந்த கும்பல் விடவில்லை.
பாலாஜியின் இரு கைகளையும் கட்டி போட்டு தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பாலாஜி சரமாரியாக தாக்கியது.
பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த கும்பல் பாலாஜியை விடவில்லை.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பாலாஜியை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் பாலாஜி தாக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்தனர்.
அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார் தாக்குதல் நடத்திய அனிஷ் உட்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் பாலாஜியை, அணிஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
கூலி தொழிலாளியை கட்டி வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகியும், அவரது நண்பர்களும் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
