Viral News
“மறுபடியும் வருவோம்” – நள்ளிரவில் பள்ளிக்குள் நுழைந்து திருடிய திருடர்கள் சாக்பீஸால் கரும்பலகையில் எழுதிய வாசகம்; மிரண்டு போன தலைமை ஆசிரியர்..!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற பிறகு, அங்கிருந்த கரும் பலகையில் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், நபரங்பூர் என்னும் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் திருடும் நோக்கத்தில் பள்ளிக்குள் நுழைந்த திருட்டுக் கும்பல் ஒன்று, அங்கிருந்த தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றது.
அங்கிருந்த கணினிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், பொருட்களை திருடி சென்றதுடன் மட்டும் நிறுத்தி விடாமல், அங்கிருந்த கரும்பலகையில், “Dhoom 4. நாங்கள் விரைவில் திரும்புவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாலிவுட்டில் இதுவரை தூம் திரைப்படத்தின் 3 பாகங்கள் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தின் கதைக் களம் என்பது திருடர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே நடப்பது போன்று அமைந்திருக்கும்.
அந்த வகையில், ‘தூம் 4’ ஆரம்பம் போல திருடர்கள் இதனை கருதிக் கொண்டு, பலகையில் அப்படி எழுதி உள்ளனர்.
அது மட்டுமில்லாமல், “முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள்” என போலீசாருக்கு சவால் விட்டு எழுதிச் சென்றுள்ளனர்.
மேலும், தங்களை போலீசாரின் தேடுதல் வேட்டையிலிருந்து திசை திருப்புவதற்காக தவறான சில மொபைல் நம்பர்களையும் எழுதி விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தலைமை ஆசிரியரின் அறையின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக, பள்ளி நிர்வாகத்தினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
பின்னர் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் இத்திருட்டு சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
