Tamil News
“கருவாடு மீனாகாது மீன் கருவாடு ஆகாது” – பட்டா கேட்ட பெண்ணிடம் பழமொழி சொன்ன தாசில்தார்; கோபத்தில் பெண் செய்த அதிரடி செயல்..!!
பட்டா மாற்றம் கோரி பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்த பெண்ணிடம், தாசில்தார் சரியான விவரம் அளிக்காமல் பழமொழி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காட்டான்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்தி-குமரவேல் தம்பதியினர்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இந்த தம்பதி மனு கொடுத்திருந்தனர்.
பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், சக்தி மற்றும் அவருடைய கணவர் குமரவேல் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.
அங்கு தாசில்தார் சிவகார்த்திகேயனிடம் தங்களது பட்டா மாறுதல் கோரிக்கை சம்பந்தமாக விபரம் கேட்டுள்ளனர்.
உடனே கடுப்பான தாசில்தார் சிவகார்த்திகேயன் “கருவாடு மீனாகாது மீன் கருவாடு ஆகாது” என்று பழமொழி கூறியதுடன், பட்டா மாறியது மாறியது தான், இதனை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
வட்டாட்சியர் சிவகார்த்திகேயன் கூறிய பதிலால் சக்தி ஆத்திரமடைந்த சக்தி அலுவலகத்தில் சராமாரியாக கேள்வி கேட்டதால் அதிகாரிகள், பொதுமக்கள் மிரண்டு போனார்கள்.
அப்போது பாதிக்கப்பட்ட சக்தி பேசுகையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வராமலேயே, அலட்சியமாக பதில் கூறுவது எந்த வகையில் நியாயம் என குமுறினார்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அப்பெண் ஆதங்கத்துடன் பேசினார்.
இச்சம்பவத்தால் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
