Viral News
ரூ.40 லட்சம் மதிப்புள்ள சுமார் 1 கிலோ அளவிலான தனது தாயின் நகைகளை திருடி காதலனுக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்த இளம்பெண்..!
பெங்களூருவை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கார் பரிசளிப்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள தனது தாயின் நகைகளை திருடிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவர் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
தீப்தி தனது வீட்டில் தனது தாய் வைத்திருந்த சுமார் 950 கிராம் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்திருக்கிறார்.
தான் திருடிய நகைகளுக்கு பதிலாக அதே போன்ற கவரிங் நகைகளை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே.5-ம் தேதி ரத்தினம்மாள் தனது நகைகளை எடுத்து பார்த்துள்ளார்.
அப்போது தான் தனது நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.
அதற்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்துள்ளதையும் தெரிந்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அம்ருதஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் தீப்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தீப்தி, மதன் என்பவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து தீப்தி வீட்டில் ஏராளமான நகைகள் இருப்பதைத் தெரிந்து கொண்ட மதன், அதை எடுத்து வந்தால் நாம் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என கூறியுள்ளார்.
இதனால் தீப்தி வீட்டிலிருந்த நகைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து வந்து மதனிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் தீப்தியிடம் வாங்கிய நகைகளை வைத்துக் கொண்டு அண்மையில் மூன்று கார்களை மதன் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் 3 கார்களையும் தீப்தி தனது காதலனுக்கு பரிசாக வழங்கியதாக போலீசாரிடம் மதன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் தீப்தி மற்றும் மதன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 3 கார்களையும், மதனிடம் இருந்த நகைகளையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
காதலனுக்காகச் சொந்த வீட்டிலேயே தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
