Tamil News
வரதட்சணை கொடுமை; வீட்டின் கதவை பூட்டிச் சென்ற மாமியார்; கடப்பாரையை வைத்து கதவை உடைத்து உள்ளே சென்ற மருமகள்..!
திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா.
இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து நடராஜன் – பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
நடராஜன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
அவர் பிரவீனாவை தனியாக வீட்டில் விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து திருமணமான மூன்றே மாதங்களில் நடராஜன் குடும்பத்தினர் மேலும் வரதட்சனை கேட்டு பிரவீனாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கணவர் வீட்டில் இல்லாத நிலையில் கணவரின் தம்பி சதீஷ், பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை பிரவீனா தன் கணவரிடம் கூறியபோது அவரை நம்பாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்டுகொண்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாமனார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார்.
மேலும், தான் வீடு திரும்பும் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் பிரவீனா, அங்கிருந்த கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.
இதனால் அந்த கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,”திருமணமாகி நான் இந்த வீட்டில் தான் வசித்துவந்தேன்.
சமீபத்தில் எனது மாமனார் மற்றும் அவரது சகோதரர் எனக்கு என்னுடைய பெற்றோர் வழங்கிய நகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், என்னை தாக்கி வெளியேற்றினர். நான் எனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன்.
இந்நிலையில் கணவர் வீட்டுக்கு நான் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்” என்றார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் நடராஜன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படி போராடிய மனைவி, கணவர் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
