Tamil News
தந்தை விட்டுச் சென்ற நிலையில், கூலி வேலை செய்து படிக்க வைத்த தனது தாய்க்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோவில் ( mother temple ) கட்டிய மகள்…!!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தன்னை கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது மகள் 20 லட்ச ரூபாய் செலவில் கோவில் ( mother temple) எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் – கூடுவாஞ்சேரி டிபன்ஸ் காலனி பகுதியை சேர்ந்த 62 வயதான லட்சுமி என்பவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டேனோகிராபராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
லட்சுமியின் தந்தை, தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து லட்சுமி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் லட்சுமி தாய் கன்னியம்மாள் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இவரது தாய் கன்னியம்மாள் கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
சிறுவயதிலேயே தந்தை வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில், பல இடங்களில் கூலி வேலை செய்து மகள் லட்சுமியை கன்னியம்மாள் படிக்க வைத்து அரசு வேலையும் வாங்கித் தந்துள்ளார்.
இதனால் தாய் மீடு அதீத பாசம் வைத்த லட்சுமி, திருமணம் செய்து கொண்டால் அவரை பிரிய நேரிடும் என்று எண்ணி திருமணமே செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம், ஓய்வூதியப் பணம் ஆகியவற்றைக் கொண்டு தனது தாய்க்கு அவர் கோவில் எழுப்பியுள்ளார்.
இது குறித்து லட்சுமி கூறியதாவது:
என்னுடைய தாய் கன்னியம்மாளுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக தந்தை எங்களை விட்டு விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.
அதன் பிறகு எனது தாய் பலரது வீடுகளில் பாத்திரம் துலக்கியும் கூலிவேலைக்கு சென்றும், என்னை படிக்க வைத்தார்.
அதனால் தான் அவரை விட்டு பிரிய மனமின்றி திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னை பொறுத்தவரையில் என் தாய் தான் எனக்கு தெய்வம்.
அதனால் தான் அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்து வழிபட்டு வருகிறேன்” என மனநெகிழ்ச்சியுடன் கூறினார்
