Viral News
காணாமல் போன 76 குழந்தைகளை மூன்றே மாதத்தில் துணிச்சலுடன் கண்டுபிடித்த பெண் காவலருக்கு பதவி உயர்வு…!!
டெல்லியில் காணாமல்போன 76 குழந்தைகளை 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்ததற்காக சீமா டாக்கா என்ற பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையில் ஜூலை 6, 2006ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தவர் சீமா டாக்கா.
பின், தென்கிழக்கு டெல்லி காவல் பகுதியில் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளார்.
அதில் 56 குழந்தைகள் 14 வயதிற்கும் குறைவானவர்கள்.
கண்டுபிக்கப்பட்டதில் பெரும்பான்மையான குழந்தைகள் கடந்த 12 மாதத்திற்குள் காணாமல் போனவர்கள்.
இதற்காக சீமா டாக்காவிற்கு காவல் உதவி துணை ஆய்வாளராக பணி உயர்வு அளித்து டெல்லி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பதவி உயர்வு மூலம் டெல்லி காவல்துறையில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 76 குழந்தைகளை 3 மாதங்களில் கண்டுபிடித்ததற்காக அவுட் ஆஃப் டர்ன் மூலம் பதவி உயர்வு பெற்ற முதல் காவலர் என்ற பெருமையை சீமா டாக்கா பெற்றுள்ளார்.
இதனிடையே இந்த பெண் காவலரின் சாதனையை காவலர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சீமா கூறுகையில்,
“நான் தடைகளின்றி தொடர்ந்து பணியாற்றுவேன்.
இப்பணிகளை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த குழந்தைகளை தில்லியில் இருந்து மட்டுமல்லாமல் மேற்குவங்கம், பஞ்சாப், பிகார் போன்ற மாநிலங்களில் இருந்து மீட்டுள்ளோம்.
மேற்குவங்கத்தில் 2018ஆம் ஆண்டு காணாமல் போன சிறுவன் தற்போது கிடைந்துள்ளான்.
இதுபோன்ற பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு இந்தக் குழந்தைகளை கண்டுபிடித்துள்ளோம்” என தெரிவித்தார்.
