Tamil News
ஒரு எலியால் அநியாயமாக உயிரிழந்த இளம்பெண்; நெஞ்சை உருக்கும் சோகம்..!
சென்னை பல்லாவரம் அருகே எலியை துரத்தி சென்ற பெண் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பொழிச்சலூர், மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்துவந்தவர் லட்சுமி (43). இவரது கணவர் செந்தில்.
செந்தில் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு 12 வயதான ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் லட்சுமியின் வீட்டல் சமீப காலமாக எலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது.
இதனால் எலிகளை ஒழிக்க பொறி வைப்பது, எலி மேட் வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனால் லட்சுமியின் முயற்சிகள் அனைத்தும் பலிக்காமல் போனதால் எலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் எலி ஒன்று ஓடிக் கொண்டிருப்பதை பார்த்த லட்சுமிக்கு கடும் கோபம் வந்துவிட்டது.
எனவே அதை எப்படியாவது அடித்துவிட வேண்டும் என்று கையில் கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு, எலியை வேகமாக துரத்தி ஓடினார்.
ஆனால் எலியின் வேகத்திற்கு லட்சுமியால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அப்போது எதிர்பாராத விதமாக லட்சுமி, வீட்டில் இருந்த கிரில் கேட் மீது தெரியாமல் மோதியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காட்சிகள் அவரது வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலியை எப்படியாவது அடித்துவிட வேண்டும் என்று ஆத்திரத்துடன் கட்டையை தூக்கி கொண்டு சென்ற பெண் கிரில் கேட்டில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
