Tamil News
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்; குவியும் பாராட்டுக்கள்..!
விருதுநகர் அருகே ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் முத்துக்குமார்.
இவரது மனைவி வீரலட்சுமி, கர்ப்பிணி பெண்.
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கருவுற்ற நாளிலிருந்து தொடா் சிகிச்சை பெற்று வந்தாா் வீரலட்சுமி.
அப்போது மருத்துவா்கள் பரிசோதனை செய்து பாா்த்தபோது அவரது கருவில் 3 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவா் உமா மகேஸ்வரி ஜெயபாஸ்கா் மற்றும் தலைமை மருத்துவா் சுரேஷ், மருத்துவா் ஜெயபாஸ்கா், குழந்தைகள் மருத்துவா்கள் நூா்தீன், முத்துகிருஷ்ணன் மற்றும் செவிலியா்கள் குழு கடந்த 10 தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் 3 குழந்தைகளையும் வெளியே எடுத்தனா்.
தற்போது, தாய் மற்றும் 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்,
வீரலட்சுமி என்ற பெண்ணுக்கு பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து உள்ளது.
இதில் 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என 3 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.
குழந்தைகள் எடை குறைவாக காணப்பட்டது. மேலும் ஒரு குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்து வந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தையும் நலமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
