Tamil News
மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நடத்தி குழந்தை பெற்ற பெண்..!
மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தையை வீட்டிலேயே இருந்து சுகப்பிரசவமாக பெற்றுக் கொண்டுள்ளார் கர்ப்பிணி பெண் ஒருவர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூரைச் சேர்ந்தவர்கள் ஜான் – பெல்சியா தம்பதினர்.
பெல்சியா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறை கருவுற்றபோது அனைவரையும் போல மருத்துவமனைக்கு மாதந்தோறும் தவறாமல் சென்று பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது இரண்டாவது முறையாக பெல்சியா கருவுற்று இருந்த நிலையில் இந்த முறை வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.
ஆனால் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் அடுத்த குழந்தையும் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவுசெய்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வந்தனர்.
மருந்து, மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தாமல் உடல் பராமரிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பெல்சியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அதனையடுத்து அதற்கு முன்னேற்பாடாக இருந்த அந்த தம்பதியினர் வீட்டிலேயே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதனையடுத்து சிறிது நேரத்தில் சுகப் பிரசவத்தின் வாயிலாக அழகான ஆண் குழந்தையை பெல்சியா பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்து நஞ்சுகொடி வருவதற்காக காத்திருந்த நேரத்தில் வீட்டிலேயே பிரசவம் நடப்பதைத் தெரிந்து கொண்ட சுகாதார துறையினர் அங்கு வந்தனர்.
இப்படி சுயமாக பிரசவம் பார்ப்பதால் தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும், அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
ஆனால் அதற்கு அந்த தம்பதியினர் மறுத்து விட்டனர். அதனையடுத்து தாய் மற்றும் சேயை பரிசோதனை செய்துவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இரவு 10.30 மணிக்கு நஞ்சுகொடி வெளியானது. இதற்காக பல மணிநேரம் காத்திருந்த தம்பதியினர் “நாங்கள் நினைத்தபடி சுகபிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.
