Tamil News
மகனுக்கு பெண் கிடைக்காததால் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 22-ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவை பின்வருமாறு:
சரக்கப்பிள்ளையூர் நாகலூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (47).
இவரது மகன் ரமேஷ் குமார் (27)
ரமேஷ்குமார் டேனிஷ் பேட்டையில் உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், ரமேஷ் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ரமேஷ் குமாரின் தாயார் லட்சுமி தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்துள்ளார்.
ஆனால் மணப்பெண் கிடைக்கவில்லை. இதனால் டேனிஷ்பேட்டையில் உள்ள 17 வயது சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க லட்சுமி முடிவு செய்துள்ளார்.
சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதை அறிந்த அவர், அந்த சிறுமியிடம் நைசாக பேசி தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ரகசிய திட்டம் போட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி லட்சுமி, டேனிஷ்பேட்டைக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது பெற்றோருக்கு தெரியாமல் நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க லட்சுமி ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமியை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் மற்றும் அவருடைய மகன் ரமேஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாயே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
