Tamil News
குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறுவர்கள்; உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய பெண்; கல்பனா சாவ்லா விருது வழங்கிய தமிழக அரசு..!!
நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த எழிலரசிக்கு வீர தீர சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றியமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், மேல வீதியை சேர்ந்தவர் எழிலரசி. நீச்சல் தெரியாத போதிலும், தண்ணீரில் தத்தளித்த, இரண்டு குழந்தைகளை காப்பாற்றி உள்ளார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தக்குளம் கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது.
சரியாக பராமரிக்கப் படாமலும் புதர் மண்டியும் கிடந்த இந்த குளத்தின் கரையில் கடந்த மே மாதம் 15-ம் தேதியன்று அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது இரு குழந்தைகளும் தவறுதலாக அருகில் இருந்த குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் சத்தம் கேட்டு, கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எழிலரசி, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அவரும் குளத்தில் விழுந்தார். எனினும், இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு, வெகு நேரம் குளத்தில் மன உறுதியுடன் போராடினார்.
அங்கு வந்த பொது மக்கள் உதவியுடன், மூவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
எழிலரசியின் வீரமான, துணிவான செயலை பாராட்டும் விதமாக, அவருக்கு 2022ம் ஆண்டுக்கான, ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று சுதந்திர தின விழாவில், அவருக்கு விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.
