Tamil News
“ஏங்க, என் வீட்டுக்காரரை பாத்தீங்களா” – காணாமல் போன கணவரின் பேனரை ஆட்டோவில் ஒட்டி ஊர் ஊராக சென்று கண்ணீர் மல்க தேடி வரும் பாச மனைவி..!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, அவரது புகைப்படம் அடங்கிய பேனரை ஆட்டோவில் ஒட்டி, அவரது மனைவி ஊர் ஊராக சென்று தேடி வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவராமன் (வயது 45).
இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தல், கடிதம் எழுதி கொடுத்தல், உரிய அலுவலர்களை அணுகுவது தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
இதில் குறைந்த வருவாயே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி மற்றும் குழந்தைகளை மிகுந்த பாசத்தோடு கவனித்து வந்துள்ளார்.
சமீபத்தில் இவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர் சற்று மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்ற சிவராமன் வீடு திரும்பவில்லை.
தனது கணவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் கணவர் கிடைக்காததால், காணாமல் போன தனது கணவர் சிவராமனை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிவராமனை தேடி வருகின்றனர்.
ஆனால், சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மனம் கலங்கிய அவரது மனைவி பழனியம்மாள் தனது கணவரை கண்டுபிடிக்க தானே முயற்சி செய்தார்.
ஒரு ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்தும், தனது கணவரின் புகைப்படம் அடங்கிய பேனரை ஆட்டோவில் ஒட்டியும், ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், கூலித்தொழிலாளியான பழனியம்மாள் தேடி அழைந்து வருகிறார்.
மேலும், காணாமல் போன தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருகிறார்.
ஒரு பெண் காணாமல் போன தனது கணவரை கண்ணீர் மல்க கணவரைத் தேடி அலையது இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு உங்க வீட்டுக்காரர் கண்டிப்பாக கிடைப்பாரும்மா என பொதுமக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
