Tamil News
வாட்ஸ் ஆப் குரூப் மூலம் நிதி திரட்டி ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வளைக்காப்பு நடத்திய பெண்கள்..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார்.
இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான தமிழ் செல்வியை காதலித்து வந்திருக்கிறார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்த திருமணத்தை பீனிக்ஸ் சிறப்பு பள்ளி மற்றும் அன்னை தெரசா குழு ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.
இந்நிலையில், தற்போது தமிழ் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவருக்கு வளைகாப்பு நடத்த போதிய வசதி இல்லாததால் குமார் தவித்து வந்திருக்கிறார்.
இதனிடையே அன்னை தெரசா வாட்சப் குழுவில் இது பற்றிய தகவல் பகிரப்பட்டிருக்கிறது.
உடனடியாக தமிழ் செல்விக்கு வளைகாப்பு நடத்த வாட்சப் குழுவில் இருந்த பலரும் தங்களால் முடிந்த பணத்தை அளித்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நண்பர்கள், வாட்சப் குழு உறுப்பினர்கள் சீர்வரிசை பொருட்களுடன் தமிழ் செல்வி- குமார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இந்த தம்பதியினர்.
இதனிடையே நண்பர்கள் தமிழ் செல்வி மற்றும் குமாருக்கு சந்தனம் பூசி சடங்குகளை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய குமார்,” கடந்த ஆண்டு பீனிக்ஸ் சிறப்பு பள்ளி மற்றும் அன்னை தெரசா குழுவை சேர்ந்தவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் எனது மனைவி 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதனையடுத்து அன்னை தெரசா வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி நண்பர்கள் வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள்.
இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என்றார்.
மாற்றுத் திறனாளி தம்பதிக்கு வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி நண்பர்கள் வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
