Tamil News
தண்டவாளத்தில் நின்று கொண்டு ஆண் நண்பருடன் செல்பி எடுத்த இளம்பெண் ரயில் மோதி உயிரிழப்பு..!
கேரளாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்கும் போது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நபாத் பதாக்.
பள்ளி மாணவியான இவர் தனது ஆண் நண்பர் இசாம் என்பவருடன் சேர்ந்து பரோக் ரயில்வே பாலத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் நின்று தனது செல்போனில் மகிழ்ச்சியாகத் தனது நண்பருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த மங்கலாபுரம் – கோயம்புத்தூர் விரைவு ரயில் இருவர் மீதும் மோதியுள்ளது.
இதில், பாலத்திலிருந்து மாணவி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.
அவரது நண்பருக்கு கை, கால்கள் உடைந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஆற்றில் விழுந்த மாணவியை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரது உடலை போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த நிலையிலிருந்த மாணவியின் நண்பர் இசாமை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாகவே இளைஞர்களின் செல்ஃபி மோகத்தால் பலர் உயிரிழந்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
