Tamil News
கொழுந்தியா மீது ஆசைப்பட்டு காரில் கடத்திச் சென்ற இளைஞர்; அதன் பின் நடந்த அதிரடி திருப்பம்..!
விழுப்புரத்தில் தங்கையை கடத்திச் சென்ற கணவர் காரின் முன்பக்கத்தில் தொங்கியபடி 500 மீட்டர் துாரம் சென்று தமது கணவனிடமிருந்து தங்கையை மீட்ட மனைவியின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018ம் ஆண்டு முதல் பிரிந்து வசிக்கின்றனர்.
இந்நிலையில் அவர் தனது மனைவியின் தங்கையை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு மனைவியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்து, நகை எடுப்பதற்காக, நேற்று மாலை 4:30 மணியளவில் குடும்பத்துடன் விழுப்புரம் வந்தனர்.
இதனை அறிந்த அந்த நபர் நகைக் கடைக்கு அருகே தனது ‘வோக்ஸ் வேகன்’ காரில் காத்திருந்தார்.
கடையில் இருந்து வெளியே வந்த மனைவியின் தங்கையை காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக புறப்பட்டார்.
இதைப் பார்த்த மனைவி, காரின் முன்பக்கமாக ஓடிவந்து தடுத்தார்.
கார் முன்னேறிச் சென்றதால், காரின் முன்பக்க ‘வைப்பரை’ பிடித்தபடி தொங்கினார்.
அப்படியிருந்தும் காரை நிறுத்தாமல் நான்கு முனை சந்திப்பில் இருந்து சென்னை மார்க்கமாக காரை ஓட்டினார்.
ஆனால், அவரது மனைவி காரை விடாமல் தொங்கியபடி 500 மீட்டர் துாரம் வரை சென்றார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள், காரை துரத்திச் சென்று, பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே மடக்கிப் பிடித்து சூழ்ந்து கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீசார் காரில் இருந்த இருவரையும், காரில் தொங்கியபடி சென்ற பெண்ணையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
குடும்ப பிரச்னை என்பதால், மூவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
சினிமா பட பாணியில் காரில் பெண் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
