Tamil News
“என் குடும்ப பிரச்சினை குறித்து விசாரிக்க நீ யார்?” – எஸ்.ஐ முகத்தில் குத்து விட்ட இளைஞர்..!
கன்னியாகுமரி அருகே போலீஸ் விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரீகன்.
34-வதான மீன்பிடி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த மேரி டார்வின் மெல்பா என்பவரை 2015-ல் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
தற்போது இந்த தம்பதியருக்கு 7-மற்றும் 5-வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந் நிலையில் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் ரீகன் மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்
இதனால் மேரி டார்வின் மெல்பா கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்படியும் ரீகன் விடாமல் ஜான்நாயகம் வீட்டுக்கு அடிக்கடி சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
அதே போல் நேற்று முன்தினம் காலையில் ரீகன் ஜான்நாயகம் வீட்டுக்கு சென்று மனைவி, மாமனார், மாமியாரிடமும் தகராறில் ஈடுபட்டார்.
உடனே இதுபற்றி ஜான்நாயகம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப் – இன்ஸ்பெக்டர் முரளீதரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரீகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ரீகன் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் முரளீதரனை தாக்கினார்.
இதில் முரளீதரன் உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காயம் அடைந்த சப் – இன்ஸ்பெக்டர் முரளீதரன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்
