Tamil News
ஒத்த ஓட்டு (vote) போடுவதற்காக, லட்சக்கணக்கில் செலவு செய்து அமெரிக்காவில் இருந்து காஞ்சிபுரம் வந்த இளைஞர்; ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டதாக பெருமிதம்..!!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஒட்டுப் (vote) போடுவதற்காக சொந்த ஊர் வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன.
வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.
218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள இடங்களுக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
சாமானியர்கள் முதல் முக்கிய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மேலும், தமிழ் திரையுலக நடிகர், நடிகைகளும் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான இம்தியாஸ் ஷெரீப் என்பவர் அமெரிக்காவில் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.
அவர், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி வாக்குப்பதிவு மையத்திற்கு இன்று காலை வந்த இம்தியாஸ் ஷெரீப் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இது குறித்துப் பேசிய இம்தியாஸ் ஷெரீப்,”நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, அதன் மூலம் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்து வாக்களித்தேன்.
நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன். அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்'” என்றார்.
தேர்தலில் ஓட்டுப்போட உள்ளூர் வாசிகளே சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து ஒருவர் சொந்த ஊர் திரும்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
