Tamil News
இரவில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய இளைஞர்; நள்ளிரவில் உடல் கருகி உயிரிழந்த சோகம்..!
கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் சுந்தரம் மகன் அர்ஜூன்(34).
பி.ஏ.(பொருளாதாரம்) பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார்.
அர்ஜூன் இரண்டு சிமெண்ட் சீட்டால் ஆன வீடு ஒன்றை அமைத்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு தனது இரண்டாவது மகன் விவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருக்கவே அருகே சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை , இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கி உள்ளார்.
அப்போது அவர் செல்போனை சார்ஜ் போட்டு இருந்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் திடீரென செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ குடிசையில் பற்றியது.
இதில் வீட்டை வெளியேற முடியாததால் அர்ஜூன் அலறியுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அவரது மனைவி கஸ்தூரி மற்றும் பக்கத்து வீட்டினர் ஓடிவருவதற்குள் தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசை முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மனைவி, மகன் கண் முன் அர்ஜூன் உயிரிழந்தார்.
இந்தவிபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் அர்ஜூன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
