Tamil News
மூன்று மத முறைப்படி திருமணம் செய்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்..!!
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என மூன்று மத முறைப்படி திருமணம் செய்த இளைஞரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.
அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 26ம் தேதி மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெறும் படியும், 27ம் தேதி மயிலாடுறையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் படியும் ஏற்பாடுகள் செய்தனர்.
அதன்படி ஒரே பத்திரிகையில் மூன்று மத அடிப்படையில் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது.
அதன்படி 26-ம் தேதி மாலை மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படியான ஆடை அலங்காரத்துடன் மண மேடையில் அமர்ந்த இளஞ்ஜோடிகளான புருஷோத்தமனுக்கும்- புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி, திருமண நோக்கம் மற்றும் கணவன் மனைவியின் கடமைகள் பற்றி எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்திவைத்தார்.
அதன்பிறகு கிறித்தவ முறைப்படி ஆடை அலங்காரங்களை மாற்றிகொண்டு வந்து மணமேடையில் அமர்ந்தனர் புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதி.
இவர்களுக்கு மங்கைநல்லூர் கிறித்துவ போதகர் அறிவுரைகள் வழங்கி, இளஞ்ஜோடிகள் மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
27-ம் தேதி காலை 9 மணிக்கு இந்து முறைப்படியான திருணம் நடைபெற்றது. புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் புருஷோத்தமன் தாலி கட்டினார்.
கிராம நிர்வாக அலுவலரின் இந்த புதிய முயற்சியை அனைவரும் வரவேற்றனர்.
