Uncategorized
“ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்தால் ஜாமீன்; நிபந்தனை விதித்த நீதிபதி”- கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..!
புதுக்கோட்டையில் உறவுக்காரப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்ஒருவர்.
தற்போது கைக்குழந்தையோடு உள்ள அப்பெண், இளைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டால் ஜாமீன் தருவதாக நீதிபதி கூறவே, நீதிமன்ற வளாகத்திலேயே அப்பெண்ணை திருமணம் செய்துள்ளார் அந்த இளைஞர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலு என்பவரது மகன் அஜித் (23).
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதில் சத்யா கர்ப்பமாகியுள்ளார். ஆனால் திடீரென்று அஜித் சத்யாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
சத்யாவுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அஜித் மீது கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அஜித்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக சிறையில் இருக்கும் அஜித், தனக்கு ஜாமீன் வேண்டுமென்று புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு முன் இரண்டு முறை ஜாமீன் மனுவை ரத்து செய்தார் நீதிபதி.
நேற்று மீண்டும் ஜாமீனுக்கு அவர் மனு தாக்கல் செய்தபோது ‘ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு கைக்குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் ஜாமின் தருகிறேன்’ என்றார்.
அதற்கு சம்மதம் தெரிவித்தனர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர்.
உடனே புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நீதிபதி அனுப்பி வைத்த வழக்கறிஞர்கள் மற்றும் சத்யாவின் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
பின் சத்யாவிற்கு அஜித், தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதன்பின் கை குழந்தையுடன் நீதிபதியை சந்தித்த அந்த தம்பதியினர் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அஜித்திற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சத்யாவுடன் சேர்ந்து வாழுமாறும் இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்றும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
