Tamil News
ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த எம்பிஏ பட்டதாரி இளைஞர் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சுற்றி திரிந்த சோகம்..!
எம்பிஏ படித்துவிட்டு,
கலெக்டராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் காதல் தோல்வியால் தன்னையே மறந்து 3 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள வங்கிகளில் நடைபாதையில் அமர்ந்திருந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே சுற்றித்திரியும் அவர் எப்போதும் ஆங்கில பத்திரிகைகளையே வாசித்து வருவதை பழக்கமாக கொண்டு இருந்தார்.
அந்த பகுதிக்கு வருவோர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கிவிடுவார்.
நீண்ட சடை முடி மற்றும் அழுக்கு உடையுடன் வலம் வந்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற பகுதியில் இருந்து முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அந்த சமயத்தில் மனநிலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பார்த்ததும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது உறவினராக இருக்க கூடும் என்ற சந்தேகம் முருகனுக்கு எழுந்துள்ளது.
சந்தேகத்தின் பெயரில், அந்த வாலிபரிடம் முருகன் சென்று பேச்சு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், முருகனின் சந்தேகம் வலுக்கவே, அங்கே நின்ற போலீசாரின் உதவியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த வாலிபருக்கு முடித்த திருத்தும் செய்து, குளிக்க வைத்து புத்தாடையும் உடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து, தென்மலையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவலும் கொடுத்துள்ளார் முருகன்
அப்போது தான், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் குறித்து ஏராளமான தகவல் தெரிய வந்தது.
கன்னியாகுமரியில் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற பகுதியைச் சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது.
ராஜபாளையத்தில் பி.காம்.பட்டப் படிப்பை முடித்த முத்து, சென்னை பல்கலைக்கழககத்தில் எம்பிஏ படித்து முடித்துள்ளார்
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தன் தங்கியிருந்த விடுதியில் இருந்து திடீரென காணாமலும் போயுள்ளார்.
அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
பல்வேறு முயற்சிகள் செய்தும் முத்துவை கண்டுபிடிக்க முடியாமல் அந்த முயற்சியையே உறவினர்கள் கைவிட்டனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் முத்து இருப்பது தெரிய வந்தது.
இதன் பின்னர், உடனடியாக கன்னியாகுமாரிக்கும் அவரது உறவினர்கள் கிளம்பி வந்தனர்.
தொடர்ந்து, அவர்களை போலீசார் தக்க முறையில் விசாரித்து, முத்துவை அனுப்பி வைத்தனர்.
MBA பட்டதாரியாக இருந்த முத்து, சென்னையில் பணிபுரிந்த போது ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், சென்னையில் இருக்கும் போது, உடன் பயின்ற பெண்ணை காதலித்ததாகவும் அந்த காதல் கை கூடாத காரணத்தினால், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நடந்தே முத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
3 ஆண்டுகளாக போலீசார், உறவினர்கள் தேடியு கிடைக்காத முத்து தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட முத்து, உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
